முனைவர் க. நெடுஞ்செழியன் அணிந்துரை
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.
‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர். ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை. இச்சூழலில்தான் உலகாய்தம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் ஆசீவகம் பற்றியும் எழுத வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக ஏ.எல். பாசம் அவர்களின் ஆய்வு நூலை மேலும் நுணுகிப் படிக்க வேண்டியிருந்தது.
ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி கோசாலர், கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலியைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் அதனால் அவ்விருவரைப் பற்றியும் ஆராய முடியவில்லை எனவும் ஏ.எல். பாசம் வருத்தப்பட்டிருந்தார்.
தமிழில் ‘கழிவெண் பிறப்பு’ என்பதை நல்வெள்ளை என்பர். அந்த நிலையை அடைந்தவர்களை நல்வெள்ளையார் என்பர். அதைப் பாலி மொழியில் ‘பரம சுக்க’ என்பர். பாலி முதலான வட மொழிகளில் அவர்களைப் பற்றி யாதொரு செய்தியும் காணப்படவில்லை என்றாலும், ஆசீவகத்தின் வேர்கள் தமிழ் நாட்டில் நிலை கொண்டிருப்பதாக ஏ.எல். பாசம் கூறியிருப்பதால், கிசசாங்கிசா, நந்தவாச்சா ஆகிய இருவரைப் பற்றிய செய்திகளைத் தமிழ் மூலங்களில் தேடினேன். அப்படித் தேட முற்பட்ட போது வியப்பூட்டும் முடிவுகள் கிடைத்தன. இந்தத் தேடலில் முதலில் அடையாளம் காணப்பட்டவர் நந்தவாச்சாவே ஆவார்.
மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மாங்குளம் கற்படுக்கைகள் கணி நந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு அமைக்கப்பட்டனவாகும். அக்கற்படுக்கைகளை அமைத்தவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் உறவினரும் ஆவர். அக் கல்வெட்டில் உள்ள நந்தாசிரியன் எனும் பெயரே நந்தவாச்சா எனப் பாலி மொழியில் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியன் எனும் சொல் ஆசான் எனவும் வழங்கும். தமிழ் ஆசான் - பிறமொழிகளில் ஆச்சாரியார் எனவும் ஆச்சான் எனவும் திரியும். பெரியவாச்சான் எனும் வைணவப் பெரியாரின் பெயரே அதற்குச் சான்றாகும். பெரிய+ஆசான் > பெரியவாச்சான் என்றானதைப் போன்றே நந்த+ஆசான் > நந்தவாசான் > நந்தவாச்சா என்று மருவியுள்ளதும் புலனாயிற்று. ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததால் இவர் கணி நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டால் அறிய முடிந்தது. இக் கணி நந்தாசிரியனே முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் நற்றிணைப் புலவராவார். திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் என்ற ஊரில் உள்ள குன்றில் இவர் ‘முக்தி’ அடைந்ததால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என அழைக்கப்பட்டுள்ளார்.. இன்றைய நிலையில் அங்குள்ள கோயில் முத்தியாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுவதுடன், மலையின் அடிவாரத்தில் ஐயனார் கோயில் இருப்பதும் பழைய வரலாற்றை உறுதி செய்யக் காணலாம்.
நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவியாவார். திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலை கற்படுக்கைக்குரிய வெண்காயபன் என்பவரே அவர் என்பதும், நற்றிணைப் புலவர்களில் ஒருவராகிய மதுரை ஓலைக் கடையத்தனார் நல்வெள்ளையார் என்பவரே அவர் என்பதும் தெளிவாயிற்று. இவ் இருவரையும் பௌத்த இலக்கியங்கள் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுகின்றன. இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் ஆய்வின் வியப்பான முடிவுகளாகும். அத்துடன் பாலி மொழியில் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகக் குறிப்பிடும் மூவரையும் தமிழர்கள் பரம ஐயனாராக - பெரமநாதராக -ப் போற்றி வருவதும் கள ஆய்வில் கண்டுணர்ந்த செய்திகளாகும்.
இப்படி ஆசீவகத்தில் பரம ஐயனார்களாக மூவரும் அஃதாவது மற்கலி, காயபர், கணி நந்தாசிரியன் ஆகிய மூவருமே தமிழகத்தில் வழிபடப்பட்டு வரும் போது ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி மட்டும் எப்படி வடநாட்டவராக இருக்க முடியும்? இந்த வினா என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்தது. வெங்காலூர்ச் சிறையில் பொய் வழக்கு ஒன்றில் தளைப்பட்டிருந்த நேரத்தில் எதிர்பாரா வண்ணம் தோழர் குணா அவர்களும் யானும் மாசாத்தனார் எனும் ஐயனாரே மற்கலி கோசாலர் என்று கண்டுணர்ந்தோம். இப்படியாக ஏறத்தாழ 30 ஆண்டு தொடர் ஆய்வில் ஆசீவகம் பற்றிய பல உண்மைகளைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் சேயாற்றிலிருந்து ஒரு துண்டறிக்கை வந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.
மற்கலி எனும் பெயர் சேயாறு, வந்தவாசி முதலான பகுதிகளில் பரவலாகப் பிள்ளைகட்குச் சூட்டப்பட்டு வந்ததாகவும், அண்மைக் காலத்தில்தான் அந்த வழக்காறு குறைந்து வருவதாகவும் அத்துண்டறிக்கை உணர்த்தியது. இச் செய்தி ஆசீவகம் பற்றிய ஆய்வில் புதிய வெளிச்சத்தைக் காட்டியது. ஆசீவகத்தின் மூலச்சுவடுகள் சங்க இலங்கியங்களின் அடியூற்றாய்த் திகழ்கின்ற உண்மைகளை எல்லாம் கண்டுணர்ந்த பின்னரும் கூட, ‘ஆசீவகம்’ எனும் பெயர் மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. அது எந்த மொழிச் சொல் என்பதிலும் உறுதி செய்ய முடியாத ஒரு நிலையே தொடர்ந்தது. இச்சூழலில்தான் மற்கலி பற்றிய துண்டறிக்கையை அனுப்பி வைத்த தோழர் ஆதி. சங்கரன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை உருவாக்கியவர்கள் என் அன்புத் தோழர்கள் முகில், ஆற்றல், சரவணன் முதலானோர். அந்தச் சந்திப்பு ஆசீவகம் பற்றிய பல புதிர்களை விடுவித்தது. அந்தச் சந்திப்பின் விளைவே, ‘ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்’ எனும் இச்சிறு நூலுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பாகும்.ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் பலருக்கும் அந்தப் பெயர் ஒரு பெரும் புதிராகவே இருந்துள்ளது. ஆ+ஜீவன் (உயிர்) என வடமொழிச் சொற்களாகக் கொண்டு அவர்கள் பொருள் விளக்கம் செய்தனர். அம் முயற்சியே அனைத்து வகையான குழப்பங்களுக்கும் காரணமாயிற்று. அந்த நெடுநாளைய குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வை இந்நூல் வழங்கியுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
ஆசீவகம் தமிழ்ச் சொல்லே!
ஆசீவகம் எனும் சொல்லை ஆசு+ஈவு+அகம் என இந்நூலாசிரியர் பிரித்துப் பொருள் விளக்கம் தருகின்றார்.ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற் படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,ஈவு - தீர்வுஅகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற் கான பெயரேயாம்என்பது ஆசிரியரின் விளக்கமாகும். விளக்கம் புதுமையானது என்றாலும் அது இலக்கண விதிக்கு உட்பட்டிருப்பது அக்கருத்தின் மெய்ம்மையை உறுதி செய்கின்றது.
உயிர்வரி னுக்குறள் மெய்விட் டோடும்எனும் நன்னூல் (164) நூற்பாவின்படிநிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியல் உகரமானது (முற்றியலுகரமும் கூட) வரு மொழி முதலில் உயிர் வந்தால் (தனக்கு இடமாகிய) மெய்யை விட்டு ஓடிவிடும்.என்பது அந்நூற்பாவின் பொருளாகும்.‘ஆசு’ என்ற சொல்லில் உள்ள ‘சு’ ச்+உ எனப் பிரியும். வருமொழி முதலில் ‘ஈ’ எனும் உயிர் எழுத்து இடம் பெற்றுள்ளதால் இலக்கண விதிப்படி, ஆசு+ஈ = ஆசீ என்றாகும். ஈவு என்ற சொல்லையடுத்து அகம் வருவதால் முந்தைய விதிப்படி ஆசு+ஈவு+அகம் = ஆசீவகம் என வரும். திரு ஆதி . சங்கரன் தரும் இவ் விளக்கம் இலக்கண விதிப்படியும் பொருந்தி விடுவதால் அப் பெயர்க் காரணம் முழுமையாக விளக்கப்பட்டு விடுகிறது. ஆசீவகம் இடவாகுப் பெயராய் அச்சமயத்தைச் சுட்டியுள்ள உண்மை மேலும் மேலும் கூடுதல் விளக்கம் பெற்றுத் தெளிவடைதல் உறுதி.
பேராசிரியர் அரசேந்திரனிடம் இச்சொல்லின் பகுப்பு பற்றி கலந்தாய்வு செய்த போது அவர், ‘வாழ்க்கைக்கு வேண்டிய பற்றுக்கோடான உண்மைகளை வழங்கிய துறவிகள் வாழும் இடம்’ எனப் பொருள் விளக்கம் தந்தார். அத்துடன் ‘ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ’ என்ற புறப்பாடலையும் எடுத்துக் காட்டி விளக்கினார். இவ்விளக்கமும் எண்ணத் தக்கதாய் உள்ளது.
ஆசீவகத்தின் அழியாச் சின்னங்களாக ஆசிரியரால் குறிக்கப்படும்,திருநிலை,சுழற்குறி,கந்தழி,இருபுற முத்தலைக் கோல்ஐம்முக்கோணம்ஆகிய குறியீடுகள் யாவும் பிறமொழிச் சொற்களாகவோ அல்லது மொழி பெயர்ப்புகளாகவோ இல்லாமல் தனித் தமிழ்ச் சொற்களாக உள்ளன. அத்துடன் சுழல்குறி எனும் பெயர் பெரிய புதிருக்கான விடையாகவும் அமைந்துள்ளது பெரும் வியப்பாகும்.
இச்செய்தியைக் கண்ட அளவிலேயே தோழர் குணா அவர்கள் சுழல்குறியை உணர்த்தும் சுழற்றியமே சுவத்திகம் என வடமொழிகளில் திரிபு பெற்றிருக்க வேண்டும் எனக் கூடுதல் தகவலையும் தந்தார். இது இந்நூலின் வரலாற்றுப் பங்களிப்பு எத்தகையது என்பதை உணர்த்தும் சான்றாகும்.
கோள்நூல்
சோதிடத்திற்கு அவர் கையாளும் ‘கோள்நூல்’ என்ற சொல் வியப்பூட்டக் கூடியதாகும். மற்கலியின் கோட்பாட்டை விளக்கும் நூல் ‘அருங்கலைச் செப்பு’ என்பதாகும். அந்நூலில் ‘கோள்நூல்’ எனும் பெயர்க் காரணம் நல்ல வண்ணம் விளக்கப்பட்டுள்ளது.
நவக்கோள் கூடி நடத்து மாண்புஉவப்பின் நிகழ்ச்சி யது.
ஆய கோள்க ளாட்ட மதுவேகாய நிகழ்ச்சி யெனல்.
நன்றுந் தீது நவக்கோ ளாட்டமென்று உணர்வ தது
தோற்ற ஒடுக்கம் யாவும் கோள்கள் ஆற்ற செயலென் றுணர்.
என அந்நூல் குறிப்பிடக் காணலாம். கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சோதிடம்’ அமைந்துள்ளதால் அதனைக் கோள்நூல் என வழங்குவதுதானே முறையாக இருக்க முடியும்?
இந்நூல் அளவால் மிகவும் சிறியதுதான். எனினும் மிகப் பெரிய பண்பாட்டு வரலாற்றை - ஓரினத்தின் அடையாளத்தை - மீட்டுருவாக்கம் செய்ய வல்ல அடித்தளத்தைக் கொணடுள்ளது என்பதே உண்மை. இந்நூலாசிரியர் பொறியியல் பட்டம் பெற்றவர். ஆயினும் இவரின் மொழிநடை தனித்தமிழில் இயல்பாயும் எளிதில் புரியும் படியும் அமைந்துள்ளது பெருஞ்சிறப்பாகும். இவ்வளவு அரிய செய்திகள் அனைத்தையும் தம் ஆசிரியரிடம் உடனுறைந்து கற்ற பாடங்கள் என்பதை அறியும் போது ஆசீவகம் அழிந்து விட்டது என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை!
தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் இந்நூல் உறுதி செய்கின்றது.உலகை மாற்றிப் போட்ட ஓர் அறிவியல் கோட்பாடு சார்பியல் விதியாகும். இக் கோட்பாட்டை 14 பக்கங்களில்தான் ஐன்சுடீன் முதன் முதலாக வெளியிட்டிருந்தார். ஒரு கோட்பாட்டின் வெற்றி அதன் அளவில் இல்லை. அது வழங்கும் செய்தியில்தான் உள்ளது. இந்த உண்மை இந்நூலுக்கும் பொருந்தும்.
தமிழ் இன மரபைத் தன் ஆசானிடமிருந்து கற்ற திரு. ஆதி. சங்கரன் இப்போது நமக்கு அவற்றை ஒப்படைக்க முன் வந்துள்ளார். இன்னும் பல உண்மைகளையும் அவர் தருவார். அவரைத் தமிழ் கூறு நல்லுலகின் சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகின்றேன்.
ஆசீவகம் பற்றி....
பன்னெடுங்கால முன்பே வடவர் வருகைக்கு முன்னர் நமக்கெனத் தொன்மையாக ஒரு வாழ்வியல் நெறி இருந்தது. அதனைக் கண்காணிக்கவும் ஒழுகி ஓம்பவும் பல இடங்களில் கற்படுக்கைகளில் இருந்து மக்களுக்கு வழி காட்டியவர்கள்தாம் ஆசீவகத் துறவிகள். இவர்கள் சைனப் படுக்கைகள் உருவாவதற்கு முன்னமே கற்படுக்கைகளமைத்து அங்கிருந்து மக்களுக்கான காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், இன்னோரன்ன பிற செய்திகளிலும் அன்றாட வாழ்வியல், வணிகம் முதலானவற்றிலும் அளவு, நிறை போன்ற வணிக வரைகளையும், வரையறுத்து வாழ்வியலை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அறிவன் கூடங்கள் பலப்பல. அவை கால வெள்ளத்தாற் சிதைந்தும், பிற மதத்தினரால் கவரப்பட்டும், பெயர் மாற்றம் பெற்றும் இன்று மக்களால் மறக்கப்பட்டு விட்டன.
இந்தத் துறவிகளே பல்லுயிர்ப் பாதுகாப்பு, கொல்லாமை, களவாமை, போர்ப்பயிற்சிகள், மெய்யியல் கோட்பாடுகள் போன்றவற்றை மக்களுக்குக் கற்பித்தனர். இந்த ஆசீவகத் துறவிகளுக்கெல்லாம் சிறந்தவராக மற்கலி என்பவர் போற்றப்படுகிறார். மற்கலி என்பதே மக்கள் வழக்கில் ‘மக்கலி’ என்று வழங்கப்பட்டு ‘மக்கிலி’ எனத் திரிந்து வழங்கப் படுகிறது. செய்யாறு பகுதியில் இந்த ‘மக்கிலி’ என்று பெயரிடும் வழக்கம் தற்போது அருகி வருகிறது.எந்த ஒரு மதமும் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில தந்திரங்களைத் தன்னுள் கற்பித்து வைக்கும். இறந்தவர்கள் பிழைப்பார்கள் என்றும், பறக்கும் குதிரையில் பறந்து சென்றார்கள் என்பது போலவும் பொய்களைக் கூறி அந்த மதங்கள் தங்கள் விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆசீவகமோ மதமாக மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடாமல் மக்களின் அன்றாட வாழ்வியலின் அடிப்படையாக அமைந்து இன்னமும் தனது இலச்சினையைத் தென்னகத்தில் - குறிப்பாகத் தமிழகத்தில் பதித்து வைத்து உள்ளது எண்ணத் தக்கது. எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதச் சின்னங்களை அணிந்திருப்பதை இயல்பாகக் காணலாம். (கிறித்தவர்கள் சிலுவைச் சின்னம் அணிவதைப் போல) ஆசீவகர்கள், மலர்மேல் அமர்ந்த மங்கையின் இருபுறமும் நீரூற்றும் யானைகள் உள்ள இலச்சினையைக் கழுத்தில் அணிவது வழக்கம். (இந்த வழக்கம்தான் இன்று தமிழர்களின் தாலிக் கொடியில் கோர்க்கப்படும், மகாலட்சுமி பொட்டு என்னும் தங்க நாணயமும் கால் காசுகளின் பின்புறத்திலுள்ள நீரூற்றும் இரு யானைகளுக்கிடையில் மலர் மேல் அமர்ந்திருக்கும் பெண் வடிவமும் என்பது குறிப்பிடத் தக்கது.) அவ்வாறு, நமது தாலிக் கொடிகளில் இன்றும் புழங்கி வரும் ஆசீவக மரபு தனது ஆசீவகக் கற்படுக்கைகளையும், ஆசீவகத் துறவிகளையும் இழந்து நிற்கிறது.கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் தனது சிறப்புக் கூறுகளை இரவல் கொடுத்த ஆசீவக சமூகம் இன்று தனது சங்கிலித் தொடரின் அடுத்த வளையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆசீவகத் துறவிகளின் எச்சமாக இருக்கும் சித்தர் பீடங்கள், குருகுலங்கள் மீண்டும் தமது பணியைப் பொது நலம் கருதித் தொடர வேண்டும் எனவும், பொது மக்களையும் அரசமைப்புகளையும் குறை சொல்லிக் கொண்டு, அயனாட்டுப் பண்பாட்டு மோகம் கொண்டு அலையும் இளைஞர் சமுதாயம் தனது பொறுப்புணர்ந்து சுற்றுச் சூழல், பல்லுயிர் ஓம்பல், ஒழுகலாறு, நெறியாண்மை போன்றவற்றில் தனது கவனத்தைத் திருப்பித் தொன்றமிழ் நாட்டின் அருகி வரும் கலைகளைப் புதுக்கித் தருவதில் பங்களிப்பைத் தர வருக எனவும் அழைக்கிறோம்.
இதனை ஒப்புக் கொள்ளும் யாவரும், தமது இல்லத்தில் ஆசீவகச் சின்னங்களை வனையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆதி. சங்கரன்
அஃஉ
முன்னுரை
ஆசீவகம் என்ற சொல்லைக் கேட்கும் போதே அது ஒரு தமிழ்ச் சொல்லா? அன்றிப் பிறமொழிச் சொல்லா? என்பதிலேயே ஆய்வாளர்களுக்குப் பெருந் திணறல் ஏற்படும் அளவுக்கு ஆசீவக நெறி இன்றைக்கு அடைந்துள்ள நிலைமை தோள்மீது கிடக்கும் துண்டினை ஆள் வைத்துத் தேடுவது போல் உள்ளது. ஆசீவகம் வாழ்வியல் நெறியேயன்றிப் பிறவன்று.
ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.
பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளையாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?
அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.
ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. இவை பற்றிப் பின்னூற்களில் பேசுவோம். தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.
இவ்வாறு பல்வேறு பிரிவினராக ஆசீவகத்தினர் பெயர் பெற்றுத் தமக்குள் பிணக்குற்றுக் காலந்தோறும் மாற்றம் பெற்ற ஒழுகியல் கூறுபாடுகளைப் பின்பற்றத் துவங்கினர். காலம் என்பது சமயம் (வேளை) எனும் திசைச் சொல்லாலும் குறிக்கப்பட்டது. (ஒரு வேளை என்பது ஒரு சமயம் என்பது போல்) காலத்தால் ஏற்பட்ட ஒழுகியல் மாற்றம் சமயம் எனும் பாகுபாட்டுப் பிணக்கினைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டு பொதுவியலில் பல்வேறு எதிர்மறைக் கருத்துக்களையும் குழுக்கள் பிரிதலையும் ஏற்படுத்தியது. இதன் பின்னரே சமயங்கள் எனும் தோல் முட்டைகள் மதங்கள் எனும் வலிய ஓடுகளைத் தம்மீது போர்த்திக் கொண்டன. பல்வேறு காலங்களிலும் பிணக்குகள் பரிணாமம் பெற்றன.
பருத்துயர்ந்த ஒரு மரம் பிளக்கப்பட்டுப் பல்வேறு பொருட்களாக மாறுவது போல் (நாற்காலி, கட்டில் போன்று) ஆசீவக மரபு தனது பொதுமையையும், தன்னையுமிழந்து பல்வேறு குழுக்களாகச் சிதறியது. மரம் என்ற பொதுமை, நாற்காலி, கட்டில் என வேற்றுமைப் பட்டது போல் குழுக்கள் சமயங்களாக உருமாறின. அப்பருத்த மரத்தினை வெட்ட உதவிய கோடரிக்கு அம்மரத்தின் கிளையே காம்பாகவும், கொடுவாளுக்குப் பிடியாகவும் இருந்து உதவியது போல் ஆசீவக மரபிலிருந்து பிரிந்த குழுக்களே ஆசீவகத்தின் முகவரியை இல்லாமற் செய்து தாமே பன்னெடுங்காலமாய் இருந்த தனிப்பெரும் பொதுமை போன்றதோர் மாயையை ஏற்படுத்தின. இவ்வாறு தன்னை யிழந்து தமது தொடரிகளாகப் பல்வேறு குழுக்களுக்கு வளர்சிதை மாற்றத்துக்கு உதவிய ஆசீவக மரபின் அழிக்க முடியாத பண்பாட்டுச் சின்னங்கள் இன்னமும் அழிக்க இயலாச் சிறப்பு நிலையில் குமுகத்தில் விரவிக் கிடப்பதனைச் சுட்டிக் காட்டி எமது மனக் கிடக்கையில் உள்ள பேரவாவினைச் சமன் படுத்து முகத்தான் இச்சிறு நூலினை யாம் யாத்தளிக்கிறோம்.ஆதரவாளர்களுக்கு நன்றி. கருத்தில் மாறுபாடு கொண்டோருக்கு விடையிறுக்கும் பொறுப்பும் எமக்கிருப்பதால் பிணக்குகளைத் தெரிவிக்கலாம் எனத் தங்கள் மறுப்புக்களை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.
நன்றியுடன்
ஆசீவகத்துறவினன் ஆதி. சங்கரன்
1. திருநிலை
ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.
இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும். இதனை இன்றைய மரவினைஞர்கள் கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர். இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசீவக மரபிற்குச் சான்று பகரும் ஆவணமாக உள்ளது. தென்னகத்தின் மக்கள் வாழ்வில் மனையாட்சியின் மாண்பாகக் கருதப்படும் சின்னம் தாலிக்கொடியாகும். இந்த மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் கால்காசுகளின் ஒருபுறத்தில் இன்றும் இந்தச் சின்னம் பொறிக்கப்படுவதால் இந்தக் கால்காசு அணியும் நாமனைவரும் ஆசீவக மரபினைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது வெள்ளிடைமலை.
மேலும் கடவுளர் திருவுருவங்கள் திருவிழாக்களின்போது தேர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுத் தெருத்தெருவாக உலாக் கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும் சிலைகளின் பின்புறம் மரத்தாலான ஒரு வளைவு சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் ‘பிரபை’ என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பர். அவ்வளைவின் இரு புறமும் இரு யானைகள் துதிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கும். அந்தப் பின்புலத்தோடு கூடிய கடவுளர் வடிவம் ஆசீவகத்தோடு நமக்குரிய மரபியல் தொடர்பினைத் தெளிவுறுத்துகிறது.
கோயில்களின் பெண்கடவுளர் தனிக் கோயில் முகப்பிலும், திருமண மண்டப முகப்புகளிலும் இந்தத் திருநிலை அமைக்கப்பட்டிருக்கும் பாங்கும் இந்தத் திருநிலை எனும் ஆசீவகச் சின்னம் இல்லற வாழ்வில் இருப்போர் பயன்படுத்தும் ஒரு மங்கலச் சின்னமாக வழங்கி வந்தது, ஐயந் திரிபற நமக்குப் புலனாகின்றது. இல்லற முகப்புகளைக் கண்ணுறும் எவரும் இச்சின்னம் வனையப்பட்ட இல்லம் ஆசீவக இல்லற நெறியில் ஒழுகிவரும் இல்லம் என்பதனை உணர்த்துவதாக அமைந்தது என்பது தெளிவு.
மாதங்கமொடு பற்செல்வம் மனைதொறு னிறைந்திருக்கமாதங்கம் மலரின்மேவி மகிழ்வொடும் கனிந்துநோக்கமாதங்கம் புறத்திருந்து மாதவள்மிசை நீர்பெய்கும்மாதங்கம் கொடுசெய்நாண்சேர் மங்கலம் நன்றேநன்றே!
(மாதங்கம்(1) மா+தங்கம் = மிகுந்த பொன்(2) மாது+அங்கம் = பெண்ணின் மேனி(3) மாதங்கம் = யானை(4) பொன்னணிகொடு - கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம்)ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல்.) இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும்.
2. சுழற்குறிதுறவு
நிலையில் கொல்லாமை. அழுக்காறின்மை, அவாவின்மை இன்னபிற நற்பண்புகளை மட்டும் பெற்றுத் துறவின் இறுதி நிலையினை அடையு முன்பாக உள்ள தேடல் நிலைத் துறவி களுக்கான ஆசீவகச் சின்னமே சுழற்குறியாகும். இதனை ‘ஸ்வஸ்திக்’ என்னும் பிற மொழிச் சொல்லால் குறிப்பர். இந்த நிலையில் உள்ள துறவிகளுக்கு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற அடைமொழி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த அடை மொழியினை இன்றும் சிலருக்கு நாம் வழங்கி வருவது கண்கூடு. எனவே இந்தச் சுழற்குறி மெய்யியலில் தேடல் நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னமாகவும் இறுதிப் பொருளை அடைந்து விடும் வாய்ப்பு திண்ணம் என்ற உறுதிப் பாட்டு நிலையில் உள்ளவர்களும் பயன்படுத்தி வந்த இந்தச் சின்னம் இப்பொழுதும் நிருவாணத் துறவிகளின் சின்னமாகவும், ஓக நெறியில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதி என்னும் துவக்கக் கடவுளின் இரு நாசிப் புழையும் இணையுமிடத்தின் அடையாளச் சின்னமாகவும் சித்தரிக்கப் படுகிறது ஆசீவக நெறியில் பின்பற்றப்படும் இச்சின்னம் இன்றும் சைனர்களும், காணாபத்தியர்களும் வணங்கும் சின்னமாக உள்ளது. ஆசீவக மரபில் உலகியல் பற்றுகளை ஒதுக்கி பேசா நிலையில் இருந்த துறவியர் சமணர் (சம+அணர் என்றால் இயக்கமற்ற அண்ணத்தினை உடையவர்; அதாவது பேசா நோன்பும் உண்ணா நோன்பும் ஆகிய நிலையில் உள்ளவர் என்று பொருள் படும்.) எனும் பிரிவினர் ஆவர். இந்த பற்றுகளைத் துறந்த தீர்த்தவிடங்கர் (தீர்த்தங்கரர்) வரிசையில் 24ஆவது துறவியான மகாவீரர் சமண நிலையினை சைனம் என்ற சமயமாக வடிவமைத்து ஒரு புதுச் சமயம் உருவாக்கினார். சமண நிலை தவிர்த்த ஏனைய ஆசீவக மரபினருக்கு ஒரு பற்றுக்கோடும் வரையறையும் தேவைப்பட்டது. அவ்வாறு வரையறை செய்யாது போனால் ஆசீவக மரபு அடையாளம் காட்டப்படாமல் போகும் என்ற நிலை உருவானது. அந்த காலக் கட்டத்தில்தான் மற்கலி என்ற ஆசீவகத் துறவி ஆசீவக மரபினை தனித்து அடையாளம் காட்டும் முகத்தான் ஒரு சமய வரைவுக்கு உட்படுத்தினார். இதனை ஆசீவக சமயத்தினை மற்கலிதான் உருவாக்கினார் என்று வரலாறு தவறாக சுட்டுகிறதே ஒழிய உண்மையில் மற்கலியார் ஆசீவகத்தை ஒரு சமயமாக வரைவு படுத்திக் காட்டுவதற்கு முன்னமே ஆசீவகம் ஒரு மரபியலாக இருந்தது என அறிய வேண்டும். ஆசீவகக் கற்படுக்கைகளைக் கைப்பற்றியவர்கள் தமது சின்னமாக எதனையும் அடையாளப் படுத்தா விட்டாலும், இந்தச் சின்னம் அவர்கள் மீதும் தனது இலச்சினையைக் குத்திவிட்டது என்பது உன்னுந்தொறும் வியப்பளிக்கவே செய்கிறது.ஆகச் சைனம், காணாபத்தியம் என்னும் பிற்காலச் சமய மரபுகள் தோன்ற ஆசீவகமே கால்கோளிட்டது.
3. கந்தழி
ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்பட்ட சுருள்வளைவே இந்தக் கந்தழி என்னும் ஆசீவகச் சின்னம். உலகியலைக் கடந்து மெய்ப் பொருளைத் தேடி அலையும் இயக்கநிலையினைக் குறிப்பது இந்தக் கந்தழியாகும். கணக்கியலில் உள்ள எண்ணிலி நிலை (infinity) யினைக் குறிப்பதாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சுருள் வளைவு எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்ட வெளியினுள் நிகழும் பல்வேறு தொடர் இயக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாக உள்ளது.
வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் இதனைக் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப் பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப் படுவதும் உண்டு.
வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் இதனைக் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப் பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப் படுவதும் உண்டு.
இல்முயல்வோனும், மாணவனும், பொருள் முயல்வோனும் இந்தச் சின்னத்தினைப் பொருத்தி ஒழுகினர் என்பதே இச் சின்னத்தின் சிறப்பினை நமக்குத் தெளிவுறுத்துகிறது.
4. இருபுற முத்தலைக் கோல்
ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் ஒரு முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் படத்தில் உள்ளது போல் வரையப்படும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு துவங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும். அவ்வழக்கமே இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடிக்கப் பட்ட சுவரில் இந்தக் குறியீட்டுச் சின்னத்தினை தமிழக மக்கள் வரை கின்றனர். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவெனில் பேரில்லங்களில் இந்த நிலை அருகி சிறு குடிசைகளிலும் ஊர்ப்புற வீடுகளிலும் மட்டுமே இதனை இன்றைய மக்கள் வரைகின்றனர்.
இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது.
இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது.
இதுவே மாலவன் வழிபாட்டின் அடையாளமாக (நாமமாக)க் கருதப்படுகிறது. உயிர்களைக் காக்கும் மேல்நோக்கிய முனை சிவன் வழிபாட்டில் சிவசின்னமாகவும், பகைஞரைக் கொல்லும் கீழ் நோக்கிய முனை கொற்றவை வழிபாட்டில் கொற்றவையின் கீழ் நோக்கிய முத்தலைக் கோலாகவும் அறியப்படுகின்றது. வெண்கலத்தாலான கைச்சிலம்பிலும் இக்குறியைக் காணலாம். ஆசீவக மரபினரின் இல்லத்திற்கு வருகை தரும் பல்தரத்தோர்க்கும் இது ஒரு எச்சரிக்கைச் சின்னமாகவும், துறவிகளுக்கான ஓம்புதல் நிகழ்த்தப்படும் ஒழுக்கம் கொண்டவர்களின் வாழிடம் எனவும் அறிவிக்கும் அறிவிப்புச் சின்னமாகவும் இது பயன்பட்டது. கோவில் சுவர்களில் பல்லியின் வடிவம் போன்று உள்ள அமைப்பும் இச்சின்னமே.பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலத்திலும் யாண்டுங் காணப்பெறாத சிவன் வழிபாடு ஒரு ஓக நிலைத் தத்துவமே. இதில் ‘வளிமுதலா எண்ணிய மூன்று’ என மாதாநுபங்கியார் சுட்டிய மூலநாடி மூன்றையும் அவை கூடி நின்று மெய்ஞ்ஞானம் பெறும் நிலையினையும் குறிக்கும் ஒரு அடையாள வரைவே சிவ வழிபாடு. இதனை நச்சி ஓம்பியோர் ஆசீவக சின்னங்களைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் வெளிப்பாடே ஆசீவகத்தின், ‘துதிக்கையை உயர்த்திய யானை’யினைச் சிவன் தோலுரித்ததாகக் கதைக்கப்பட்டது. ஆனால் பண்டைத் தமிழகத்தின் முல்லை நில மக்களிடம் வழிபாட்டிலிருந்த மாலோன் வணக்கத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் யானையினைத் திருமால் தமது படைக்கலத்தால் (கந்தழியால்) காத்ததாகக் காப்பியம் கூறினர். இதுவே மரபுகள் மாறி மதம் தோன்றிப் பிணக்குகளை உருவாக்கியதற்குச் சான்று.
ஓக நெறியினை நாடிய பல துறவிகள் தமது கையில் ‘தண்டு’ எனும் கருவியை வைத்திருந்ததாக அறிகிறோம். இதுவும் நடுத்தலையில்லாத முத்தலைக்கோலின் எச்சமே என்பது காண்டற்றகும்.
இருபுற முத்தலைக்கோலின் மேற்புறம் சிவனுக்கும், கீழ்ப்புறம் கொற்றவை வழிபாட்டின் காலமுறை வளர்ச்சி பெற்றிட்ட காளி, சக்தி, என்று வழங்கப்பட்ட பெண் கடவுளர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே சக்தியும் சிவனும் இருபாதி ஒன்றாக இணைந்த வடிவினர் என வழங்கப்படுகிறது. ஓக நெறியில் கதிர், மதி எனும் இரு மூச்சுக்களும் வெவ்வேறாகப் பிரிந்து செயல்பட்டாலும் சுழுமுனை எனும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.ஆக ‘சாக்தம்’ ‘சைவம்’ எனும் இரு வழிபாடுகளும் ஆசீவகத்தின் சின்னத்தையே அடையாளமாகக் கொண்டு எழுந்தன. வைணவமும் முத்தலைக் கோலையும் கந்தழியையும் கொண்டே எழுந்ததாகப் புலனாகின்றது.
5. ஐம்முக்கோணம்
ஆசீவகம் மாந்தர்கள் மட்டுமின்றிப் பல்லுயிர் வளன் பற்றியும் அக்கறை கொண்டிருந்தது. பண்டைய நாட்களின் செல்வவளம் ஒருவரது விளைநிலம், மனை சார்ந்த சொத்துக்களை விட அவர்களிடமிருந்த பசுக் கூட்டங்களைக் கொண்டே அளவிடப்பட்டது. செல்வத்தை மாடு எனும் சொல்லால் குறிப்பர். செல்வத்தை மதிப்பிடும் அளவுகோலாக வரையறைப் படுத்தப் பயன் பட்டதால் பசுக் கூட்டங்களும் மாடு என்ற சொல்லால் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாடை இருமாடை எனப் பொன்னிறையைக் கூட மாடு எனும் சொல்லின் வேர்ச்சொல்லையுடைய சொல்லால் குறித்தனர்.
அத்தகைய கால்நடைகளுக்குத் திடுமென ஏற்படும் பேரழிவு தரத்தக்க நோய்களுக்கு ஐந்திறமிக்க மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்வதுடன் அவ்வாறு செறிவூட்டப் பட்ட மருத்துவம் செய்யப்பட்ட கொட்டிலில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோய் அச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் சின்னமாக ஐந்து முக்கோணங்கள் ஒரு நேர் வரிசையில் வரையப்படும். ‘தற்போது கூட ஊர்ப்புறங்களில் மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீரருந்தும் தொட்டியிலும், கொட்டில்களிலும் இச்சின்னத்தினை வரைவதனைக் காணலாம். கால்நடை மருத்துவத்தில் ஐம்பூதக் கலப்பும் செறிவும் சரியான படிக் கண்காணிக்கப் படுவதனை இவ்வைந்து முக்கோணங்கள் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கோமாரி (கோமாற்றி) என்ற நோய் வரும்போதெல்லாம் ஊர்ப்புற மக்கள் இந்தச் சின்னத்தினை மாட்டுக்கொட்டிலில் இன்றும் வரைகின்றனர். இதனைக் கோமாறி எழுதுதல் என்று சேயாறு பகுதியில் வழங்குகின்றனர். இச்சின்னம்பற்றி விரிக்கிற் பெருகும். ஆதலால் இவ்வளவில் நிற்கிறோம். முக்கோணங்கள் நேர் வரிசையில் மட்டுமின்றி தலைகள் ஒன்றோடொன்று பொருந்தியவாறும் வரையும் வழக்கமும் இருந்தது.
6. முப்புள்ளி
அஃஉ எனும் குறியீடு கொண்டது இச்சின்னம்.மொழி நூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக் குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவதாலும் (எடு. ‘க்’ எனும் எழுத்து ‘க்கு’ என உகரம் சேர்த்து ஒலிக்கப்படுவது.) அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு, இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னத்தின் குறியீடு சிறப்புடையதாகும்
தமிழ் மொழியில் உள்ள இகரம் இம்முப்புள்ளியை ஒத்த ஒரு ஓகக் குறியீடே. இகரத்தில் ‘இ’ என்று எழுதும் போது மூன்று வட்டப் புள்ளிகள் அமைவதைக் காணலாம். ஆனால் இகர நெடிலாகிய ‘ஈ’ காரத்தில் தலைப்புப் புள்ளி தவிர்த்து ஏனைய இரு புள்ளிகளும் பயின்று வருகிறது. ஏனைய உயிர் எழுத்துக்கள் யாவும் ஒரு வட்டத்தினை ஆதியாகக் கொண்டே எழுதப் படுகின்றன.
அதாவது உயிர் எழுத்துக்களை எழுதத் துவங்கும் போதே ஒரு முழு வட்டம் போட்ட பிறகே எழுத இயலும். கவனிக்க: அ,இ,ஊ,ஏ,ஐ,ஓ போன்று. முதலில் வட்டம் வரைந்தால்தான் உயிர் எழுத்துக்களை எழுத இயலும். இது அண்ட (முட்டை) இயக்கத்தினைக் குறிக்கிறது. இயக்கம் தருபவை உயிர் எழுத்துக்களே. மெய்யெழுத்துக்களும் எண்ணுப் பெயர்களும் உகர ஒலியில் முடிகின்றன. சுழியம், ஆயிரம், இலக்கம், சங்கம், பதுமம், கோடி இன்னோரன்ன முழு வடிவங்கள் தவிர்த்து ஏனைய எண்ணுருக்கள் உகர ஒலியிலேயே முடிதல் காண்க. (எடு.) ஒன்று, இரண்டு,ஆக, உயிரும் மெய்யும் இரு புறமும் நிற்க, உயிர்ப்பும் ஞானமுமாகிய முப்புள்ளி இடையில் நிற்கும். இக்குறியீட்டின் சிறப்பு விவரித்தலரிது.
ஓக நெறியில் கதிர், மதி, சுடர் எனும் மூன்றையும், வளியில் இடை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நிலைகளையும் இம்முப்புள்ளி குறியா நின்றது.கௌமார சமயம் என அழைக்கபடும் குறிஞ்சி நிலத்துக் குமர மதத்தில் முருகனது கை வேலாக நிற்கும் படையும் இம்முப்புள்ளியின் பொது வரையறையாகும். குமர மதமும் ஆசீவத்திடம் இதனை இரவல் பெற்றே எழுந்தது.தமிழ் மொழியில் உள்ள ஆய்த எழுத்தினை ஒத்த இச்சின்னம் ஞானம் கூடும் நிலையினை அதாவது இயல்பான இரு கண்களுடன் மூன்றாவதாக அறிவுக் கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இந்த நிலை தனிநிலை (சிறப்பு நிலை) எனப்பட்டது. இந்த முப்புள்ளிக்கு முன்னதாக அகரத்தையும் பின்னதாக உகரத்தையும் சேர்த்து எழுதும் முறை பொது வடிவமாகும்.
ஆசீவக மரபில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் இருப்பிடம் இக்குறியீட்டாலேயே சுட்டப் பட்டது.எதனையும் எழுதத் துவங்கும் முன் ஓலைகளிலும் தாள்களிலும் இச்சின்னத்தைப் பதிவு செய்த பின்பே எழுதும் முறை உண்டு. சில காலத்திற்கு முன்பு வரை தொடர்ந்த இவ்வழக்கம், அம் முப்புள்ளிக்குப் பின்னால் வரும் உகரத்தை மட்டும் தலைப்பில் எழுதித் துவங்கும் முறையாகக் குறுகி விட்டது. இதனைத் தற்போது பிள்ளையார் சுழி என்று வழங்குகின்றனர்.
பிள்ளையார் சுழியுடன் எழுதத் துவங்கும் யாவரும் ஆசீவக மரபில் வந்தவர்களே என்பது தெளிவாகிறது.
7. புள்நகக் கீற்று
பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப் படுத்தப் பட்டன. நமது சேயாறு பகுதியில் உக்கல் என்ற ஊரின் ‘ஆனைக்கல்’ என வழங்கும் பாறையின் மீது இவ்வடிவம் உள்ளது. இக்கல்லின் பெயரே இவ்விடத்தின் ஆசீவகத் தொன்மையைத் தெளிவுறுத்துகிறது. திருக்கழுக்குன்றத்தின் மலையுச்சியில் கழுகு தன் அலகைத் தேய்த்த இடம் என்று சொல்லபடும் இடம் உண்மையில் புள்நகக் கீற்று அமைந்துள்ள இடம்தான்.
முடிவுரை
ஆசீவகக் கடலினின்றும் சிதறிய ஒரு துளி. மீண்டும் தன் பழைய வடிவம் பெறத் துடிக்கிறது. எமது உணர்வுத் துடிப்பினுக்கிடையில் இழையோடும் தொன்மை அவா தங்களையும் பழைமை உண்மையின் பக்கம் பற்றி இழுக்கும் என நம்பி விடை பெறுகிறேன்.
நன்றி.
Comments
ஆசீவகம் என்ற வலைப்பூவை தற்செயலாகக் காண முடிந்தது. ஆசீவகப்பள்ளி என்ற வலைப்பூவை தாங்கள் பார்த்திருக்கிறீர்களா?
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் கட்டுரை முழுமை பெற்றதாக வெளியிடப்படவில்லையே! ஏன்?
தோள்மீது உள்ள துண்டு என்பது தோல் மீது உள்ள துண்டு என்று வழுவாகப் பதியப்பட்டு உள்ளது. திருத்தவும்.
நன்றி.
மிக்க நன்றி.
ச.சரவண பாபு.
* ஆசீவகத்தேடலில் இருப்பவர்களுக்கு சில குறிப்புகள்:
----------------------------------------------------
புத்தகம்: "ஆசிவகத்தின் அழியாச்சின்னங்கள்": ஆதி சங்கரன்.
புத்தகம்: "ஆசிவகமும் ஐயனார் வரலாறும்": க.நெடுஞ்செழியன்.
யு டியுப்: "தமிழ் சிந்தனையாளர் பேரவை"