Skip to main content

கணியம் எனும் சோதிடம் அறிவியலா? மூடத்தனமா? - ஆதி சங்கரன்

சித்தர் பெருமக்களின் இரக்கத்தினால் இயங்கும் புவியுயிர்ச் செயல்பாடுகளில் "கோள்நூல்" எனப்படும் சோதிடம் என்பது பாமரத் தனமான மூட நம்பிக்கையா? அல்லது இயற்கையின் ஆணைக்கொப்ப இயக்கப்படும் ஒரு ஒழுங்கான நிகழ்வமைப்பா என்பதே இங்குக் காணப் போந்த கருத்தாகும்.

முதற்கண், கோள்களின் இயக்கங்களை வரையறைப் படுத்திக் காணுகையில் ஒவ்வொரு கோளுக்கும் இயல்பே அமைந்ததான வடிவம் கோள வடிவமாகும். கோள் எந்த வடிவத்தை உடையதாக உள்ளதோ அவ்வடிவம் "கோளம்" எனப்பட்டது. கோள வடிவம் எனவும் வழங்கத் தலைப்படலாயிற்று. புவியின் வடிவம் கோளம் என்று "கோபர்நிகஸ்" என்ற மேனாட்டு இயற்பியல் அறிஞர் அறிவதற்கு முன்னதாகவே புவி மட்டுமின்றி ஏனைய கோள்களும் உருண்டை வடிவம் கொண்டவையே என மாணிக்க வாசக சுவாமிகள் பாடியுள்ளார்.

"அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்..."

(திருவண்டப் பகுதி, திருவாசகம்)

தொன் தமிழ்ச் சான்றோர் கோள்களின் பாதைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றின் விளைவுகளாய "ஒளி மறைவு" (கிரகணம்), பருவ கால மாற்றங்களை முன் உரைத்தமை யாவரும் அறிந்ததே.

இனி சோதிடம் எனப்படும் கோள்நூல் பற்றி ஆயுங்கால், ஒவ்வொரு மனிதனின் பிறப்பியமும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 360 பாகை கொண்ட நீள் வட்டத்தின் அமைப்பில் குறிப்ப தாகும். (நீள்வட்டம் வரைதல் கைப்பழக்கத்தில் திரிபுற்று நீள் சதுரத்தில் தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும் (பன்னிரண்டு இராசிகளாக) ஒவ்வொன்றும் 300 பாகையை உள்ளடக்கி அமைகிறது. பிறப்பியத்தில் குறிக்கப்படும் இலக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். (அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோளமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.

மேலும் ஆய்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக்கதிர்களுண்டு. அவற்றின் அலை நீளங்களும் ஒளிச் சிதறல் தன்மைகளும் வேறுபட்டவை யாகும். (சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியனவாதல் இதற்கு எடுத்துக் காட்டாகும்.) பிறப்பியத்தில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து கொண்டுள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன. பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புது விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக் கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் "கிரக வலிமை" என்பர்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும். இதனையே "வக்ரம்" எனக் குறிப்பிடுவர். எதிர்ப்புலம் கொண்ட கோள் பகுதிகள் உடைந்து சென்று மறுகோளை நோக்கிச் செல்லும். இப்பகுதிகளின் தாக்குதலால் சிறுசிறு பகுதிகள் அழிவதுண்டு. பெரும்பாலும், வளிமண்டல எல்லைக்குள் படும் துகள்கள் எரிந்து போய்விடுகின்றன. இவையே விண்கல் அல்லது எரிகற்கள் விழுவதாகவும் கூறப்படுவதுண்டு. எப்படியிருப்பினும், கோளியக்க எதிர் விசையால் இயற்கைச் சமநிலை தவறாது "கோள் சமனிலை" பாதுகாக்கப் படுகிறது. இதன் தொடர் ��ிகழ்வுகள் விரிக்கின் பெருகும் என அஞ்சி விடுக்கிறேன்.

இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்)யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்பட்டுப் பெரிதாக்கப் படுவது போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறப்பிய காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.

இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும். அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே கணியம் என்கின்ற சோதிடமாகும். இவ்வளவு பெரிய அறிவியலை சிந்தனா சக்தியும், கல்வியறிவும் இல்லாத பாமரர் சிலர் கொச்சையாகப் பயன்படுத்திப் பொருளீட்ட முனைந்து விட்டதால் "கோள்நூல் அறிவியல்" மக்களிடையே தனது மதிப்பை இழந்து மூட நம்பிக்கையாகக் கருதப் படுகின்றது.

இக்குறையினைக் களையத் திறன் சார்ந்த சிந்தனையாளர்கள் இத்துறைக்கு வருவதே இதற்குத் தீர்வாக இருக்கும் என்ற எம் விழைவு கூறி முடிக்கிறோம்.

Comments

மிகவும் பயனுள்ள இணைப்புகள். அற்புதம். படிக்க படிக்க இன்னும் படிக தோன்றுகிறது. நன்றி. இதை எழுதியவர் மற்றும் பகிர்ந்தவார்கும்.

Popular posts from this blog

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்

முனைவர் க. நெடுஞ்செழியன் அணிந்துரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார். ‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்...

ஆதித் தமிழர் மெய்யியல் - ஆதி. சங்கரன்

ஆதித் தமிழர் மெய்யியல் ஆதி. சங்கரன் முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம். பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம். 1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல். 2. ம...

ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும்

தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன. எழுத்துப் பாலியலில் பெண் எழுத்துக்களாகக் கருதப்படும் இவையே ஊழ்க மெய்யியலில் (யோகம்) முதன்மையான இடத்தைப் பெற்றவை. தமிழின் பிற எழுத்துக்கள் மொழிக்கு இலக்கணம் கூறும்காலை, இவ்வெழுத்துக்கள் மெய்யியலுக்கு இலக்கணம் கூற வல்லவை. இவற்றுள் ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும், நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும். ஐயம் என்னும் சொல் சேட்டுமத்தைக் குறிப்பதாகும். ஐயம் > ஐ+ய்+அம் ஐ - பகுதி ய் - உடம்படுமெய் அம் - விகுதி ஐயம் என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாம். இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ‘ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம். இந்த ஐய நிலை கைவரப் பெற்ற ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே ஐயன் எனவும் ஐயனார் எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது. ஐயன் > ஐ+ய்+அன் ஐ - பகுதி ய் - உடம்படுமெய் அன் - ஒருமை ஆண்பால் விகுதி இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே ஐயனார் எ...